Wednesday, March 10, 2010

டாக் டே ஆப்ட'னூன் (Dog Day Afternoon)

சிட்னி லூமெட் (Sidney Lumet) இயக்கி 1975ல் வெளிவந்து மிக பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் 'டாக் டே ஆப்ட'னூன்'.. 1972ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்கள். "நீங்கள் பார்க்க இருப்பது உண்மை. 1972ல் ஆகஸ்ட் மாதம் 22ம் நீயூயார்க்கின் ப்ரூக்ளினில் நடந்த சம்பவமிது.." என்கிற எழுத்துகளுடன் தான் படமே ஆரம்பிக்கிறது.

ஒரு கோடைக்கால மதிய நேரத்தில், ப்ரூக்ளினில் உள்ள ஒரு சிறிய வங்கிக்குள் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நுழைகின்றனர் மூவர். சன்னி (sonny) மற்றும் சால் (sal) இவர்களுடன் அவர்களது மற்றொரு நண்பனும் சேர்ந்து கூட்டம் வெகு கம்மியாக இருக்கும் நேரத்தில் வங்கிக்குள் நுழைந்து, துப்பாக்கிகளை வெளியே எடுத்தவுடன் அவர்களுடன் வந்த அந்த மூன்றாம் நண்பன் பயம் கொள்ள ஆரம்பிக்கிறான். தன்னால் இந்த கொள்ளையில் தொடர்ந்து எடுபட முடியாது என்றும், தான் பாதியிலேயே அவர்களது ப்ளானில் இருந்து கழண்டு கொள்வதாகவும் கூற, வேறு வழியில்லாமல் அவனை வங்கியை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, சன்னியும் சாலும் மட்டும் வங்கியிலிருபவர்களை துப்பாக்கி முனையில் ஒருபுறம் நிறுத்துகின்றனர். சால் துப்பாகியுடன் அவர்களை பார்த்து கொள்ள, சன்னி பணமிருக்கும் லாக்கர்களுக்கு செல்கிறான். ஆனால் அங்கே வெறும் 1000 டாலர் மட்டுமே இருக்கின்றன. அப்போது தான் அவர்கள் வங்கியின் அன்றைய தின பணத்தை மெயின் வங்கிக்கு எடுத்து கொண்டு போன பின்பு வந்தது அவர்களுக்கு தெரிகிறது.

மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகிறான் சன்னி. அவர்கள் எதிர்பார்த்து வந்ததோ பெரிய தொகைக்கு. பணம் கம்மியாக இருப்பதனால் அங்கிருக்கும் டிராவலர் செக்களை (traveller cheque) எடுத்து கொள்கிறான். ஆனால் அந்த செக்களை அவர்கள் உபயோகிக்கும் போது அவர்களை ட்ரேஸ் செய்து பிடித்து விடாமலிருப்பதற்காக பாங்க் ரெஜிஸ்டரை எரிக்கிறான். அதனால் வெளிவரும் புகை சுற்றிலும் இருப்பவர்களை உள்ளுக்குள் ஏதோ பிரச்சனை நிகழ்வதாக சந்தேகத்தை கிளப்பிவிட, சிறிது நேரத்தில் அங்கே போலீஸ் வந்து விடுகிறது. உள்ளே 8 பெண்கள் மற்றும் ஒரு மேலதிகாரியுடன் சன்னியும் சாலும் இருக்க, வங்கியை சுற்றிலும் 250 துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்படுகின்றனர். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கதை நடப்பது 1972ல். அப்போது மிகபெரிய தொழில்நுட்பமெல்லாம் வளர்ந்திருக்கவில்லை என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

அரை மணி நேரத்தில் கொள்ளையடித்து கொண்டு வேகமாக போய்விடலாமென்று நினைத்த சன்னிக்கு போலீசார் சுற்றி வளைத்து கொண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் சில வினாடிகள் குழம்பி போகிறான். சன்னியும் சாலும் அனுபவமிக்க கொள்ளைகாரர்களெல்லாம் கிடையாது. எனவே நிலைமையை எப்படி சமாளிப்பதென்று சன்னி யோசிக்க ஆரம்பிக்கிறான். உடனே வங்கிக்குள் அவனுடன் இருப்பவர்களை பணைய கைதிகளாக வைத்து தப்பித்து கொள்ளலாமென்று திட்டம் தீட்டுகிறான். ஆனால் அங்கிருக்கும் எவரையும் கொல்வதற்கோ அல்லது காயப்படுத்துவதற்கோ அவனுக்கு மனமில்லை. யாரையும் எந்தவிதத்திலேயும் துன்புறுத்த மனம் வராதவன் அவன். அவனது இரக்க குணத்தை கண்டு அங்கிருப்பவர்களே அவனுக்கு உதவ முன்வருகின்றனர். அவனது திட்டத்திற்கு தாங்களாக முன்வந்து நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியான டிடெக்டிவ் மோரேட்டி (Moretti) சன்னியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்களை சுற்றி எவ்வளவு போலீஸ் படை குவிக்கப்பட்டிருக்கிறது என்பதை சன்னியே வெளியே வந்து பார்க்கும் படி மோரேட்டி கூறுகிறார். உள்ளே சாலை வைத்து விட்டு, அவன் மட்டும் வங்கிக்கு வெளியே வந்து நேரடியாக எவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சன்னி பார்க்கிறான். அங்கு குழுமியிருக்கும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சியாளர்களும் இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த எல்லா காட்சிகளையும் டி.வி.காரர்கள் படம் பிடித்து நேரடி ஒலிபரப்பு செய்கின்றனர். சன்னியும் அவனது நண்பன் சாலும் சரணடைந்து விடும்படி மோரேட்டி சன்னியிடம் சொல்ல, அதை அவன் மறுத்து விடுகிறான். அதுமட்டுமல்லாமல், 8 பிணைய கைதிகள் உள்ளே இருக்கும் போது, இவ்வளவு போலீசாரை கூடிக் கொண்டு வந்து தாக்குதல் நடத்த போகிறீர்களா என்று கேட்கிறான். 'அட்டிகா ஜெயிலில் கைதிகள் போராட்டம் நடக்கும் போது, கைதிகளோடு சேர்த்து பொதுமக்களையும் அங்கே வேலை செய்யும் அதிகாரிகளையும் கொன்று குவித்த போலீசாரின் அலட்சிய போக்கு கலந்த செயலை சொல்லி, அதே போல் இங்கேயும் அப்பாவிகளை துப்பாகியால் சுட்டு கொல்ல தான் இங்கே குவிந்திருக்கிறீர்களா..?' என்று கேள்வி எழுப்புகிறான். இவையெல்லாம் நேரடி ஒளிபரப்பில் தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருக்க, கொள்ளை அடிக்க வந்திருந்தாலும் மனித தன்மையுடன் அவன் பேசுவது மக்களுக்கு பிடித்து விடுகிறது. அங்கு குழுமி இருக்கும் மக்கள் கோஷங்கள் எழுப்பி அவனை ஆதரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

பணைய கைதியாக இருப்பவர்களுக்கு உணவு வேண்டுமென்று சொல்லி போலீசாரிடமிருந்து வாங்கி கொடுக்கிறான். உள்ளே இருக்கும் மேலதிகாரிக்கு சக்கரை நோயிருப்பதால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போக, டாக்டரை கூடி வரும்படி கேட்டுக் கொண்டு, அவருக்கு வைத்தியம் பார்க்க அனுமதிக்கிறான். அவனது அக்கறையையும் மனிதாபிமான தன்மையும் பணைய கைதியாக இருப்பவர்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. அதோடு நில்லாமல் சர்க்கரை நோயுள்ள மேலதிகாரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருதய பரிசோதனைகள் செய்யவேண்டுமென்று உள்ள வந்த டாக்டர் சொல்ல, 'சரி' என்று அவரை விடுவிக்க சம்மதிக்கிறான். ஆனால் அவரோ தனது அலுவலர்களை விட்டுவிட்டு போக மறுத்து உள்ளுக்குள்ளேயே இருக்க முடிவெடுக்கிறார்.. இதனிடையில் அங்கிருக்கும் சூழ்நிலையை எப்.பி.ஐ. (FBI) தனது கட்டுப்பாடிற்கு கொண்டு வருகிறது. ஷெல்டன் (Sheldon) என்னும் எப்.பி.ஐ. அதிகாரி சன்னியுடன் பேச்சு வார்த்தையை தொடர்கிறார்.

தானும் சாலும் நாட்டை விட்டு வெளியேற தங்களுக்கு ஒரு ஜெட் வேண்டுமென்று போலீசாரிடம் கோரிக்கை வைக்கிறான் சன்னி. ஜெட் இருக்குமிடத்திற்கு தங்களையும் அங்கிருக்கும் பணைய கைதிகளையும் கூட்டிக் கொண்டு போக ஒரு ஹெலிகாப்டரை அந்த பில்டிங்கிற்கு மேல் தளத்தில் கொண்டு வந்து நிறுத்துமாறு போலீசிடம் கேட்கிறான். ஹெலிகாப்டரை நிறுத்துமளவிற்கு அந்த பில்டிங் வலிமையானது இல்லையென்று போலீசார் சொல்ல, சரியென்று ஒரு பெரிய வேன் கேட்கிறான். அதற்கு போலீசார் சம்மதிக்கிறார்கள்.

தன்னுடன் கூட கூட்டி கொண்டு போக தனது கே (gay - ஓரின சேர்க்கை) காதலன் லியானை (leon) கூட்டிக் கொண்டு வருமாறு அவன் கேட்கிறான். லியான் என்பவன் அலிகள் அல்லது திருநங்கையர் என்று சொல்லப்படும் வகையை சேர்ந்தவன். போலீசார் அவனை கூட்டிக் கொண்டு வந்ததும், சன்னி ஏன் கொள்ளையடிக்க வந்தான் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிய வருகிறது. தான் பெண்ணாக மாற அறுவை சிகிசை செய்ய தேவையான பணத்தை புரட்டவே சன்னி பாங்க்கை கொள்ளையடிக்கும் அளவிற்கு முடிவெடுத்திருக்கிறான் என்பதை லியான் எல்லோருக்கும் சொல்கிறான். மற்றபடி சன்னி மிக நல்லவன் என்பது இப்போது எல்லாருக்கும் தெரிகிறது. அது மட்டுமல்லாமல், சன்னியை விட்டு போக லியான் முன்பே தற்கொலை முயற்சி எடுத்திருப்பதும் தெரிய வருகிறது. தன்னுடன் வருமாறு சன்னி வைக்கும் கோரிக்கையை லியான் நிராகரித்து விடுகிறான். யாருக்காக இவ்வளவும் செய்ய முயன்றானோ அவனே இப்பொது தன்னை வேண்டாம் என்பதாக பேசியவுடன் சன்னி மனம் உடைந்து போகிறான்.

இதனிடையில் சன்னிக்கு முறையாக திருமணமான ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவன் தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசுகிறான். போலீஸ் அதிகாரிகள் அவனுடைய அம்மாவை அங்கு வரவைத்து அவனுடன் பேச வைத்து அவனுடைய திட்டங்களை கைவிட சொல்லி சொல்கிறார்கள். ஆனால் அவன் எதையும் கேட்க மறுக்கிறான். திட்டத்தை கைவிட்டால் கண்டிப்பாக சிறைக்கு சென்று வாழ்நாள் முழுதும் இருக்க நேரிடும் என்பதால் தொடர்ந்து தனது திட்டப்படி நாட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறான். கடைசி நேரத்தில் எதுவும் ஆகலாம் என்று தனது உயிலை அங்கே எழுதி கையெழுத்திடுகிறான். அதில், தனது இன்சூரன்ஸ் பணத்தில் தான் இறந்த பின்பு, ஒரு தொகை அவனது ஓரின சேர்க்கை காதலனான லியானிற்கும், மேலும் கொஞ்சத்தை தனது மனைவிக்கும் போய் சேர வேண்டுமென்று தனது விருப்பத்தை எழுதி வைக்கிறான். அந்த காட்சிகள் அவன் எவ்வளவு நல்லவன் என்பதையும், தன்னை சார்ந்தவர்களை அவன் எவ்வளவு நேசிப்பவன் என்பதையும் அழுத்தமாக பாதிக்கின்றன.

பின்பு அவன் கேட்டுக் கொண்டபடியே வேன் வந்து நிற்கிறது. வேனை முதலில் சோதித்து பார்க்கிறான். ஆபத்து எதுவுமில்லையென்று நம்பிக்கை வந்ததும் எல்லோருடனும் வேனில் ஏற சம்மதிக்கிறான். தான் கேட்டது ஒவ்வொன்றும் கிடக்க கிடைக்க ஒவ்வொருவராக விடுவிக்க சம்மதித்து, வேன் வந்ததும் பணைய கைதிகளில் ஒருவரை விடுவிக்கிறான். பின்பு இருக்கும் மற்ற எல்லோருடனும் சேர்ந்து வேனில் ஏறி ஜெட் இருக்குமிடத்திற்கு வருகிறார்கள். சன்னி டிரைவருடன் முன்னால் உட்கார்ந்து கொள்ள, சால் பின் சீட்டில் மற்றவருடன் உட்கார்ந்து டிரைவரை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடியே அவர்கள் பயணிக்கிறார்கள். டிரைவராக உட்கார்ந்திருக்கும் முற்பி (Murphy) சாலிடம் தவறுதலாக சுட்டுவிடாதபடி துப்பாக்கியின் முனையை மேல் நோக்கி பிடித்து கொண்டு வரும்படி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வருகிறான். வேன் ஜெட் இருக்குமிடத்திற்கு வருகிறது. எல்லோரும் வேனுக்குள் உட்கார்ந்திருக்க, எப்.பி.ஐ. அதிகாரி ஷெல்டன் வேனுக்கு அருகில் வருகிறார். சன்னிக்கு அப்போது தான் தன்னுடன் வருபவர்களுக்கு சாப்பாட்டையும் சேர்த்து வாங்கி வைக்க சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று ஞாபகம் வருகிறது. பணைய கைதிகளாக வருபவர்கள் பசியுடன் இருக்க போகிறார்களே என்று வருத்தப்படுகிறான். ஷெல்டனிடம் தன்னுடன் வருகிறவர்களுக்கு சாப்பாடு வாங்கி விமானத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்று விசாரிக்கிறான். எல்லாம் இருக்கிறது என்று ஷெல்டன் சொல்ல, தான் வாக்கு கொடுத்தபடியே இன்னும் ஒரு பணைய கைதியை விடுவிக்கிறான் சன்னி.

மற்ற எல்லாரும் உட்கார்ந்திருக்க, சால் முற்பியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி கவனமுடன் இருக்க, ஷெல்டன் சன்னியிடம் பேசி கவனத்தை திருப்புகிறார். அதே நேரத்தில் முற்பி சாலிடம் துப்பாக்கியின் முனையை தூக்கி பிடிக்கும்படியும், தவறுதலாக சுட்டு விடாதிருக்கும்படியும் சொல்ல, சால் துப்பாக்கியை மெல்ல மேலே தூக்க, முற்பி தான் ஒழித்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து சட்டென்று சாலின் தலையில் சுட்டுவிட்டு, சன்னியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து விடுகிறான். சில நொடிகளில் என்னவென்று யோசிப்பதற்குள் சால் பிணமாக சாய, நடந்துவிட்டதை உணர்த்து அதிர்ந்து ஸ்தம்பித்து விடுகிறான் சன்னி. முற்பி துப்பாக்கி முனையில் சன்னியை நிறுத்தி விட, சன்னி கைது செய்யப்படுகிறான். அவன் முன்னே சாலின் பிணத்தை தள்ளிக் கொண்டு போகிறார்கள். பிணமாக போகும் சாலை கண்கலங்கியபடி பார்த்து கொண்டு நிற்கிறான் சன்னி.. அதனுடன் படம் முடிகிறது..

படம் முடியும் போது, மனம் கனக்க ஆரம்பித்து விடுகிறது. இது உண்மையில் நடந்த கதை. உயிருக்கு உயிராக தான் நேசிப்பவர்களுக்காக எதையும் செய்யவும் எவ்வளவு பெரிய அபாயகரமான முயற்சிகளை மேற்கொள்ளவும் தயங்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் சன்னி என்கிறான் அந்த கேரக்டர். 1972ல் நடந்த உண்மை சம்பவத்தில் சன்னியாக இருந்தது ஜான் வோஜ்டோவிஸ் (John Wojtowicz) என்பவன். அவனை பற்றிய விபரங்களை நீங்கள் விக்கிபீடியாவில் படிக்க முடியும். அல் பசினோ (Al Pacino) சன்னியாக மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார். யாரையும் துன்பப்படுத்த மனமில்லாதவன், தான் உயிருக்குயிராக நேசிப்பவருக்காக வங்கியை கொள்ளையடிக்க முயல்வதும், தான் எதிர்பார்த்ததை விட சூழ்நிலை மோசமாக போக, அதை கடினப்பட்டு கையாள்வதுமாக சன்னியின் கேரக்டரில் அல் பசினோ வாழ்ந்து காட்டி இருப்பார். அவர் தனது காதலியான லியானுடன் பேசும் காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமானவை. படம் வெளிவந்த பின்பு, படத்தை பார்த்த ஜான் வோஜ்டோவிஸ், தனது கேரக்டரை அல் பசினோ மிகவும் அருமையாக நடித்திருப்பதாகவும், மிக முக்கியமாக சன்னியும் லியானும் தொலைபேசியில் பேசும் காட்சிகளில் என்ன நடந்ததோ அதே போல் நடித்திருப்பதாகவும் பாராட்டியதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் படத்தின் முழு காட்சிகளில் 30% மட்டுமே நடந்தபடி படமாக்கி இருப்பதாகவும் ஜான் வோஜ்டோவிஸ் செய்தியாளர்களிடம் பிற்காலத்தில் சொன்னதாகவும் செய்திகள் உண்டு.

இந்த படத்தை பற்றிய மேலும் பல தகவல்களை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம். இந்த பதிவை எழுதும் போது, இந்த படம் வரலாற்றில் மிக சிறந்த 250 ஹாலிவுட் படங்களில் 165வது இடத்தில் உள்ளது.

Thursday, March 4, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா..

கெளதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா.. இது இயக்குனர்களின் திரைப்படம்.. சினிமாவை கலைக் கண்ணோடு காண்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். தமிழ் படமென்பதால் கதையை பற்றி பேசாமல், படத்தை பற்றிய எனது கருத்துக்களை மட்டும் எழுதலாமென்று தான் இந்த பதிவு..

வேறுபட்ட மதத்தை சேர்ந்த இருவர் காதலிப்பதையும் அதனை சுற்றிய நிகழ்வுகளையும் பற்றிய கதை.. அதை கொஞ்சம் டைரக்டர் டச்சுடன் (directory touch) சொல்லியிருப்பது படம் முடியும் போது ரசிக்க வைக்கிறது. என்ன, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். படம் மிகவும் மெதுவாக நகர்வது தான் படத்தின் மிக பெரிய மைனஸ் பாய்ன்ட்.

முதன் முதலாக சிலம்பரசன் நடித்த படத்தை முழுவதுமாக பார்த்தேன். அதுவும் தியேட்டரில். பொதுவாக அவரது நடிப்பும் என்னுடைய ரசனையும் அவ்வளவாக ஒத்துப் போகாது என்பதால் ரிஸ்க் எடுத்து அவரது படங்களை பார்ப்பதில்லை. இது கௌதமின் படமென்பதால் நம்பி பார்த்தேன். நம்பிக்கை மோசம் செய்யவில்லை.. மிகவும் இயல்பான, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு. பல காட்சிகளில் மிகவும் அருமையாகவே நடித்திருக்கிறார்.

அழகாக வந்து போவது மட்டுமல்லாமல், நன்றாக நடித்தும் இருக்கிறார் த்ரிஷா. அவருடைய கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக படைத்திருக்கும் கௌதமை பாராட்டலாம். குடும்ப பாசத்திற்கும் காதலுக்கும் இடையில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் எதார்த்தமான ஒரு பெண்ணை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

படத்தின் இறுதி காட்சிகளில் இயக்குனரின் டச் மிக அருமை. ஒருவேளை இது கௌதமின் சொந்த கதையோ என்று தோன்றுகிறது :-) பாடல்களை இன்னும் கொஞ்சம் நன்றாக படைத்திருக்கலாம் ஏ.ஆர்.ரஹ்மான்.. படம் மெதுவாக போவதை தவிர, மற்றவை எனக்கு பிடித்திருந்தது. கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று பின் மண்டையில் ஒரு சின்ன ஏக்கம் ஏற்பட்டது. படங்களை ரசித்து பார்க்கும் பழக்கமுள்ளவர் என்றால் நீங்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

Sunday, February 28, 2010

பியாண்ட் எ ரீசனபில் டவுட் (Beyond A Reasonable Doubt)

Peter Hyams இயக்கிய Beyond A Reasonable Doubt திரைப்படம் 2009'ல் வெளிவந்தது. பல திருப்பங்கள் நிறைந்தது. பொதுவாகவே மைக்கேல் டக்லஸ் (Michael Douglas) நடித்த படங்கள் எனக்கு பிடிக்கும் என்பதால் தான் இந்த படத்தை பார்க்க முடிவெடுத்தேன்.

சுருக்கமாக கதையை சொல்கிறேன். பிரபலமான அரசாங்க வழக்கறிஞர் மார்க் ஹன்டர் தொடர்ச்சியாக 17 கொலை குற்ற வழக்குகளில் வெற்றி பெற்று பெரும் புகழ் பெறுகிறார். சந்தர்ப்ப சாட்சியங்கள் மட்டுமே உள்ள நிலையில் கொலையாளி தப்பிக்க கூடிய நிலை வரும் போது கடைசி நேரத்தில் அவர் கொண்டு வரும் சில ஆதாரங்களின் மூலமாகவே அவர் தனது எல்லா வழக்குகளையும் வெல்வது குறிப்பிடத்தக்கது. அந்த அனைத்து கடைசி நேர சாட்சியங்களுமே கொலையாளியின் DNA சம்பந்தப்பட்ட ஏதாவதொரு ஆதாரம் கொலை நடந்த இடத்தில் கிடைத்திருப்பதாக அவர் நீதி மன்றத்தில் சமர்பித்து கொலையாளிக்கு தண்டனை வாங்கி தருகிறார். அவரது அடக்கமான தன்மையும் மானுடம் மீதான ஈடுபாடும் அவருக்கு பெரும் புகழை பெற்று தருகிறது.

அவ்வாறான தொடர் வெற்றியின் மூலமாக அவர் கவர்னர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு தகுதி பெறுகிறார். இதனிடையில் டி.வி. ரிபோர்ட்டரான சி.ஜே. நிகோலஸ் (C.J. Nicholas), மார்க் ஹன்டர் ஏதோ ஏமாற்று வேலை செய்தே அந்த கடைசி நேர ஆதாரங்களை கொண்டு வருகிறார் என்றும், அவை போலியானவை என்றும், அவர் தவறாக தனது வழக்குகளில் வெற்றி பெற அநியாயமாக பொய் ஆதாரங்களை கொண்டு வந்து நிரபராதிகளுக்கு தண்டனை வாங்கி தருகிறார் என்று நம்புகிறான். இதை நிரூபிப்பதற்காக ஹன்டருடன் வேலை செய்யும் எல்லா என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்தி கொள்கிறான். அவள் மூலமாக ஹன்டர் பற்றிய சில ஆதாரங்களை சேகரிக்க முற்படுகிறான். 

அதே நேரத்தில் எல்லாவின் அழகில் மயங்கி அவளை காதலிக்கவும் ஆரம்பிக்கிறான். முதலில் அவனுடன் சாதரணமாக பழகும் அவள், தேசிய விருதை அவனுக்கு வாங்கி தந்த அவன் தயாரித்த ஒரு குறும் படத்தை பார்க்க நேரிடுகிறது. தனது வளர்ப்பு தந்தையால் கர்பிணியாக்கப்படும் தைஈஷா என்றொரு அபலை பெண்ணை பற்றியது தான் அந்த குறும் படம். அவளது தாயும் அவளை விரட்டி விட, வயிற்றில் குழந்தையோடு வீதியில் யார் துணையுமின்றி கஷ்டபடுகிறாள் அந்த பதினைந்து வயது இளம்பெண். சாப்பாட்டிற்காக அவள் விபசாரமும் செய்கிறாள். பின்பு அவளுக்கு பிறக்கும் குழந்தை இறந்து விட அதை புதைக்க கூட வழியில்லாமல், கோவிலில் இருப்பவர்கள் தயவு கூர்ந்து அவளது குழந்தையை புதைப்பார்கள் என்று கோவில் வாசலில் பிணத்தை விட்டு செல்லும் அவளது கதையை அவளே சொல்வதை அவன் படம் பிடித்திருக்கிறான். அது தான் அந்த குறும் படம். படம் முழுக்க அந்த இளம் பெண்ணின் முகம் காண்பிக்கப்படாமல், அவளது முகத்தை நிழல் கொண்டு இருட்டாக்கப்பட்டு அவளது கைகளை மட்டும் வெளிச்சத்தில் வைத்து உள்ளம் உருகுமளவிற்கு அவன் அந்த குறும் படத்தை எடுத்த விதமே அவனுக்கு அந்த நேஷனல் அவார்ட் கிடைக்க செய்ததை அறிகிறாள். அவனது திறமையை பார்த்து Ella உள்ளம் உருகுகிறாள். அந்த குறும் படம் அவளை ரொம்பவே பாதித்து விடுகிறது.

பின்பு அவன் தன்னுடன் வேலை செய்யும் தனது நண்பன் பின்லேயின் உதவியுடன் மார்க் ஹன்டர் தயாரிக்கும் பொய் ஆதாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஒரு பெரும் திட்டத்தை தீட்டுகிறான். யாரென்றே தெரியாத ஒரு கொலை நடக்கும் போது, அந்த கொலையில் கிடைக்கும் சில தடயங்களையும் சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் உபயோகித்து, அதே போன்று சூழ்நிலை ஆதாரங்களை தன்னை சுற்றிலும் ஏற்படுத்தி, தன்னை போலீஸ் சூழ்நிலையின் பேரில் கைது செய்ய வைப்பது தான் அவனது திட்டம். அதே நேரத்தில் சூழ்நிலை ஆதாரங்களை அவன் ஏற்படுத்துவதை தனது நண்பன் பின்லேயை படம் பிடிக்க சொல்கிறான். எனவே இந்த கொலை வழக்கை ஹன்டர் கையிலெடுக்கும் போது, சூழ்நிலை ஆதாரங்கள் போதாது என்னும் சூழ்நிலை வரும் போது தனது DNA சம்பந்தமான ஒரு பொய் ஆதாரத்தை கடைசி நிமிடத்தில் கொண்டு வந்து வழக்கை வெல்ல முயலுவார். கடைசியில் அவர் அவ்வாறான பொய் ஆதாரத்தை கொண்டு வந்தவுடன், தான் நிரபராதி என்பதை தாங்கள் பதிவு செய்த வீடியோ பதிவை நீதி மன்றத்தில் காண்பித்து நிரூபிப்பதுடன், ஹன்டர் இப்படித் தான் பொய் ஆதாரங்களை கடைசியில் கொண்டு வந்து இத்தனை வழக்குகளை வென்று நிரபராதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருகிறார் என்பதையும் நிரூபிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். இதன் மூலமாக தனக்கும் தனது நண்பனுக்கும் மிக பெரிய விருது கிடைக்கும் என்றும் நம்புகிறான். 

அதே போல விரைவிலேயே ஒரு கொலை நடந்கிறது. ஒரு விபசார பெண் பார்க்கில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அந்த கொலைக்கு ஏற்றவாறு சூழ்நிலை ஆதாரங்களை நிக்கோலஸ் ஏற்பாடு செய்கிறான். அவனது நண்பனும் அதை வீடியோ செய்கிறான். அவன் எதிர்பார்த்த படியே அவன் கைதும் செய்யப்படுகிறான். ஹன்டர் வழக்கை எடுத்து கொள்கிறார். இதனிடையே ஹன்டருடன் போலி ஆதாரங்களை கொண்டு வர உதவியாக இருக்கும் அவரது நண்பனான போலீஸ் அதிகாரி அந்தோணிக்கு நிக்கோலசின் திட்டம் தெரிய வருகிறது. இருவரும் சேர்ந்து நிகோலஸ் பதிவு செய்த வீடியோவை அழிப்பதுடன் இதற்கெல்லாம் ஒரே சாட்சியான அவனது நண்பன் பின்லேவையும் கொன்று விடுகிறார்கள். பின்பு கடைசி நேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் DNAகள் கலந்த ரத்தம் நிகோலசிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவனது உடையில் இருந்ததாக ஒரு ஆதாரத்தை கொண்டு வந்து நிகோலசிற்கு மரண தண்டனையும் வாங்கி தந்து விடுகின்றனர். 

இவையெல்லாம் ஹன்டரின் மோசடிகளை வெளியே கொண்டுவர தான் போட்ட திட்டமென்று நிகோலஸ் எவ்வளவோ சொல்லியும் அவனால் அதை நிரூபிக்க முடியாமல் போகிறது. ஹன்டரும் அவனது போலீஸ் நண்பனான அந்தோணியும் நிகோலசை பார்த்து சிரிக்கிறார்கள். மரண தண்டனை கிடைத்து விட்ட நிலையில், எப்படியாவது தன்னை காப்பாற்றும் படி எல்லாவின் உதவியை நாடுகிறான் நிகோலஸ். பின்பு அவனது காதலி எல்லா எப்படி கடினப்பட்டு மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் தக்க ஆதரங்களுடன் ஹன்ட்டர் செய்யும் ஆதர மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நிகோலசை வெளியில் கொண்டு வருகிறாளா என்பது மீதி கதையாக வருகிறது. ஆனால் கதை அது மட்டுமல்ல.

கடைசியில் ஹன்டர் செய்யும் ஆதர மோசடிகள் நிரூபிக்கப்பட்டு நிகோலஸ் வெளியே வந்தவுடன் (ஆஹா கதையை சொல்லிடேனா) கிளைமாக்ஸ் முடிந்தது என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் போது தான் கிளைமாக்ஸ் தொடங்குகிறது. ஹன்டர் மோசடிகள் செய்கிறவர் தான்.. ஆனால் நிஜம் அது மட்டுமல்ல என்று படத்தை மிகவும் எதிர்பாராத திருப்பங்களுடன் முடித்திருப்பார்கள். கடைசி ஐந்து நிமிடங்கள் நாம் உறைந்து நிற்கும்படியான திருப்பத்துடன் படம் முடிகிறது.

இன்னொருவருடைய உயிர் எந்தவிதத்திலேயும் மற்றவருடைய உயிரை விட தாழ்ந்ததல்ல, மற்றவருடைய உயிரை பறிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லையென்னும் ஒரு செய்தியையும் படத்தில் வெளிப்படுத்துகிறார்கள். படத்தின் பல காட்சிகள் யூகிக்கும் படியாக போய் கொண்டிருக்கும் போது, கடைசி ஐந்து நிமிடங்களில் யோசித்தே பார்க்க முடியாத திருப்பத்துடன் முடித்திருப்பதே படத்திற்கு 'வாவ்' சொல்ல வைக்கிறது.

Jessse Metcalfe நிகோலசாகவும், Michael Douglas மார்க் ஹன்டராகவும் மிக சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். அரசாங்க வக்கீலாக வரும் மைக்கேல் டக்லஸ், மிகவும் கம்பீரமான ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். Beyond A Reasonable Doubt.. கண்டிப்பாக பார்க்கலாம். ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாது.

ஐ.எம்.டி.பி.யில் இந்த படத்தை பற்றிய மேலும் பல தகவல்களையும், இந்த படத்தை பற்றிய மக்களது ரேட்டிங் என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.