Sunday, February 28, 2010

பியாண்ட் எ ரீசனபில் டவுட் (Beyond A Reasonable Doubt)

Peter Hyams இயக்கிய Beyond A Reasonable Doubt திரைப்படம் 2009'ல் வெளிவந்தது. பல திருப்பங்கள் நிறைந்தது. பொதுவாகவே மைக்கேல் டக்லஸ் (Michael Douglas) நடித்த படங்கள் எனக்கு பிடிக்கும் என்பதால் தான் இந்த படத்தை பார்க்க முடிவெடுத்தேன்.

சுருக்கமாக கதையை சொல்கிறேன். பிரபலமான அரசாங்க வழக்கறிஞர் மார்க் ஹன்டர் தொடர்ச்சியாக 17 கொலை குற்ற வழக்குகளில் வெற்றி பெற்று பெரும் புகழ் பெறுகிறார். சந்தர்ப்ப சாட்சியங்கள் மட்டுமே உள்ள நிலையில் கொலையாளி தப்பிக்க கூடிய நிலை வரும் போது கடைசி நேரத்தில் அவர் கொண்டு வரும் சில ஆதாரங்களின் மூலமாகவே அவர் தனது எல்லா வழக்குகளையும் வெல்வது குறிப்பிடத்தக்கது. அந்த அனைத்து கடைசி நேர சாட்சியங்களுமே கொலையாளியின் DNA சம்பந்தப்பட்ட ஏதாவதொரு ஆதாரம் கொலை நடந்த இடத்தில் கிடைத்திருப்பதாக அவர் நீதி மன்றத்தில் சமர்பித்து கொலையாளிக்கு தண்டனை வாங்கி தருகிறார். அவரது அடக்கமான தன்மையும் மானுடம் மீதான ஈடுபாடும் அவருக்கு பெரும் புகழை பெற்று தருகிறது.

அவ்வாறான தொடர் வெற்றியின் மூலமாக அவர் கவர்னர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு தகுதி பெறுகிறார். இதனிடையில் டி.வி. ரிபோர்ட்டரான சி.ஜே. நிகோலஸ் (C.J. Nicholas), மார்க் ஹன்டர் ஏதோ ஏமாற்று வேலை செய்தே அந்த கடைசி நேர ஆதாரங்களை கொண்டு வருகிறார் என்றும், அவை போலியானவை என்றும், அவர் தவறாக தனது வழக்குகளில் வெற்றி பெற அநியாயமாக பொய் ஆதாரங்களை கொண்டு வந்து நிரபராதிகளுக்கு தண்டனை வாங்கி தருகிறார் என்று நம்புகிறான். இதை நிரூபிப்பதற்காக ஹன்டருடன் வேலை செய்யும் எல்லா என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்தி கொள்கிறான். அவள் மூலமாக ஹன்டர் பற்றிய சில ஆதாரங்களை சேகரிக்க முற்படுகிறான். 

அதே நேரத்தில் எல்லாவின் அழகில் மயங்கி அவளை காதலிக்கவும் ஆரம்பிக்கிறான். முதலில் அவனுடன் சாதரணமாக பழகும் அவள், தேசிய விருதை அவனுக்கு வாங்கி தந்த அவன் தயாரித்த ஒரு குறும் படத்தை பார்க்க நேரிடுகிறது. தனது வளர்ப்பு தந்தையால் கர்பிணியாக்கப்படும் தைஈஷா என்றொரு அபலை பெண்ணை பற்றியது தான் அந்த குறும் படம். அவளது தாயும் அவளை விரட்டி விட, வயிற்றில் குழந்தையோடு வீதியில் யார் துணையுமின்றி கஷ்டபடுகிறாள் அந்த பதினைந்து வயது இளம்பெண். சாப்பாட்டிற்காக அவள் விபசாரமும் செய்கிறாள். பின்பு அவளுக்கு பிறக்கும் குழந்தை இறந்து விட அதை புதைக்க கூட வழியில்லாமல், கோவிலில் இருப்பவர்கள் தயவு கூர்ந்து அவளது குழந்தையை புதைப்பார்கள் என்று கோவில் வாசலில் பிணத்தை விட்டு செல்லும் அவளது கதையை அவளே சொல்வதை அவன் படம் பிடித்திருக்கிறான். அது தான் அந்த குறும் படம். படம் முழுக்க அந்த இளம் பெண்ணின் முகம் காண்பிக்கப்படாமல், அவளது முகத்தை நிழல் கொண்டு இருட்டாக்கப்பட்டு அவளது கைகளை மட்டும் வெளிச்சத்தில் வைத்து உள்ளம் உருகுமளவிற்கு அவன் அந்த குறும் படத்தை எடுத்த விதமே அவனுக்கு அந்த நேஷனல் அவார்ட் கிடைக்க செய்ததை அறிகிறாள். அவனது திறமையை பார்த்து Ella உள்ளம் உருகுகிறாள். அந்த குறும் படம் அவளை ரொம்பவே பாதித்து விடுகிறது.

பின்பு அவன் தன்னுடன் வேலை செய்யும் தனது நண்பன் பின்லேயின் உதவியுடன் மார்க் ஹன்டர் தயாரிக்கும் பொய் ஆதாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஒரு பெரும் திட்டத்தை தீட்டுகிறான். யாரென்றே தெரியாத ஒரு கொலை நடக்கும் போது, அந்த கொலையில் கிடைக்கும் சில தடயங்களையும் சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் உபயோகித்து, அதே போன்று சூழ்நிலை ஆதாரங்களை தன்னை சுற்றிலும் ஏற்படுத்தி, தன்னை போலீஸ் சூழ்நிலையின் பேரில் கைது செய்ய வைப்பது தான் அவனது திட்டம். அதே நேரத்தில் சூழ்நிலை ஆதாரங்களை அவன் ஏற்படுத்துவதை தனது நண்பன் பின்லேயை படம் பிடிக்க சொல்கிறான். எனவே இந்த கொலை வழக்கை ஹன்டர் கையிலெடுக்கும் போது, சூழ்நிலை ஆதாரங்கள் போதாது என்னும் சூழ்நிலை வரும் போது தனது DNA சம்பந்தமான ஒரு பொய் ஆதாரத்தை கடைசி நிமிடத்தில் கொண்டு வந்து வழக்கை வெல்ல முயலுவார். கடைசியில் அவர் அவ்வாறான பொய் ஆதாரத்தை கொண்டு வந்தவுடன், தான் நிரபராதி என்பதை தாங்கள் பதிவு செய்த வீடியோ பதிவை நீதி மன்றத்தில் காண்பித்து நிரூபிப்பதுடன், ஹன்டர் இப்படித் தான் பொய் ஆதாரங்களை கடைசியில் கொண்டு வந்து இத்தனை வழக்குகளை வென்று நிரபராதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருகிறார் என்பதையும் நிரூபிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். இதன் மூலமாக தனக்கும் தனது நண்பனுக்கும் மிக பெரிய விருது கிடைக்கும் என்றும் நம்புகிறான். 

அதே போல விரைவிலேயே ஒரு கொலை நடந்கிறது. ஒரு விபசார பெண் பார்க்கில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அந்த கொலைக்கு ஏற்றவாறு சூழ்நிலை ஆதாரங்களை நிக்கோலஸ் ஏற்பாடு செய்கிறான். அவனது நண்பனும் அதை வீடியோ செய்கிறான். அவன் எதிர்பார்த்த படியே அவன் கைதும் செய்யப்படுகிறான். ஹன்டர் வழக்கை எடுத்து கொள்கிறார். இதனிடையே ஹன்டருடன் போலி ஆதாரங்களை கொண்டு வர உதவியாக இருக்கும் அவரது நண்பனான போலீஸ் அதிகாரி அந்தோணிக்கு நிக்கோலசின் திட்டம் தெரிய வருகிறது. இருவரும் சேர்ந்து நிகோலஸ் பதிவு செய்த வீடியோவை அழிப்பதுடன் இதற்கெல்லாம் ஒரே சாட்சியான அவனது நண்பன் பின்லேவையும் கொன்று விடுகிறார்கள். பின்பு கடைசி நேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் DNAகள் கலந்த ரத்தம் நிகோலசிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவனது உடையில் இருந்ததாக ஒரு ஆதாரத்தை கொண்டு வந்து நிகோலசிற்கு மரண தண்டனையும் வாங்கி தந்து விடுகின்றனர். 

இவையெல்லாம் ஹன்டரின் மோசடிகளை வெளியே கொண்டுவர தான் போட்ட திட்டமென்று நிகோலஸ் எவ்வளவோ சொல்லியும் அவனால் அதை நிரூபிக்க முடியாமல் போகிறது. ஹன்டரும் அவனது போலீஸ் நண்பனான அந்தோணியும் நிகோலசை பார்த்து சிரிக்கிறார்கள். மரண தண்டனை கிடைத்து விட்ட நிலையில், எப்படியாவது தன்னை காப்பாற்றும் படி எல்லாவின் உதவியை நாடுகிறான் நிகோலஸ். பின்பு அவனது காதலி எல்லா எப்படி கடினப்பட்டு மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் தக்க ஆதரங்களுடன் ஹன்ட்டர் செய்யும் ஆதர மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நிகோலசை வெளியில் கொண்டு வருகிறாளா என்பது மீதி கதையாக வருகிறது. ஆனால் கதை அது மட்டுமல்ல.

கடைசியில் ஹன்டர் செய்யும் ஆதர மோசடிகள் நிரூபிக்கப்பட்டு நிகோலஸ் வெளியே வந்தவுடன் (ஆஹா கதையை சொல்லிடேனா) கிளைமாக்ஸ் முடிந்தது என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் போது தான் கிளைமாக்ஸ் தொடங்குகிறது. ஹன்டர் மோசடிகள் செய்கிறவர் தான்.. ஆனால் நிஜம் அது மட்டுமல்ல என்று படத்தை மிகவும் எதிர்பாராத திருப்பங்களுடன் முடித்திருப்பார்கள். கடைசி ஐந்து நிமிடங்கள் நாம் உறைந்து நிற்கும்படியான திருப்பத்துடன் படம் முடிகிறது.

இன்னொருவருடைய உயிர் எந்தவிதத்திலேயும் மற்றவருடைய உயிரை விட தாழ்ந்ததல்ல, மற்றவருடைய உயிரை பறிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லையென்னும் ஒரு செய்தியையும் படத்தில் வெளிப்படுத்துகிறார்கள். படத்தின் பல காட்சிகள் யூகிக்கும் படியாக போய் கொண்டிருக்கும் போது, கடைசி ஐந்து நிமிடங்களில் யோசித்தே பார்க்க முடியாத திருப்பத்துடன் முடித்திருப்பதே படத்திற்கு 'வாவ்' சொல்ல வைக்கிறது.

Jessse Metcalfe நிகோலசாகவும், Michael Douglas மார்க் ஹன்டராகவும் மிக சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். அரசாங்க வக்கீலாக வரும் மைக்கேல் டக்லஸ், மிகவும் கம்பீரமான ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். Beyond A Reasonable Doubt.. கண்டிப்பாக பார்க்கலாம். ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாது.

ஐ.எம்.டி.பி.யில் இந்த படத்தை பற்றிய மேலும் பல தகவல்களையும், இந்த படத்தை பற்றிய மக்களது ரேட்டிங் என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment