கெளதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா.. இது இயக்குனர்களின் திரைப்படம்.. சினிமாவை கலைக் கண்ணோடு காண்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். தமிழ் படமென்பதால் கதையை பற்றி பேசாமல், படத்தை பற்றிய எனது கருத்துக்களை மட்டும் எழுதலாமென்று தான் இந்த பதிவு..
வேறுபட்ட மதத்தை சேர்ந்த இருவர் காதலிப்பதையும் அதனை சுற்றிய நிகழ்வுகளையும் பற்றிய கதை.. அதை கொஞ்சம் டைரக்டர் டச்சுடன் (directory touch) சொல்லியிருப்பது படம் முடியும் போது ரசிக்க வைக்கிறது. என்ன, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். படம் மிகவும் மெதுவாக நகர்வது தான் படத்தின் மிக பெரிய மைனஸ் பாய்ன்ட்.
முதன் முதலாக சிலம்பரசன் நடித்த படத்தை முழுவதுமாக பார்த்தேன். அதுவும் தியேட்டரில். பொதுவாக அவரது நடிப்பும் என்னுடைய ரசனையும் அவ்வளவாக ஒத்துப் போகாது என்பதால் ரிஸ்க் எடுத்து அவரது படங்களை பார்ப்பதில்லை. இது கௌதமின் படமென்பதால் நம்பி பார்த்தேன். நம்பிக்கை மோசம் செய்யவில்லை.. மிகவும் இயல்பான, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு. பல காட்சிகளில் மிகவும் அருமையாகவே நடித்திருக்கிறார்.
அழகாக வந்து போவது மட்டுமல்லாமல், நன்றாக நடித்தும் இருக்கிறார் த்ரிஷா. அவருடைய கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக படைத்திருக்கும் கௌதமை பாராட்டலாம். குடும்ப பாசத்திற்கும் காதலுக்கும் இடையில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் எதார்த்தமான ஒரு பெண்ணை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
படத்தின் இறுதி காட்சிகளில் இயக்குனரின் டச் மிக அருமை. ஒருவேளை இது கௌதமின் சொந்த கதையோ என்று தோன்றுகிறது :-) பாடல்களை இன்னும் கொஞ்சம் நன்றாக படைத்திருக்கலாம் ஏ.ஆர்.ரஹ்மான்.. படம் மெதுவாக போவதை தவிர, மற்றவை எனக்கு பிடித்திருந்தது. கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று பின் மண்டையில் ஒரு சின்ன ஏக்கம் ஏற்பட்டது. படங்களை ரசித்து பார்க்கும் பழக்கமுள்ளவர் என்றால் நீங்கள் இந்த படத்தை பார்க்கலாம்.
Hope..!
12 years ago
No comments:
Post a Comment